அங்கன்வாடி ஊழியர்களை துன்புறுத்தாதீர்! எதிர்க்கட்சி தலைவர் அசோக் எச்சரிக்கை
பெங்களூரு: ''அமைதியாக போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்களை துன்புறுத்தாதீர்கள். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்,'' என்று அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் காலவரையற்ற போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டம் நடத்தும் தங்களை போலீஸ் மூலம் அரசு மிரட்டுவதாக, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று சென்றார். அங்கன்வாடி ஊழியர்களிடம் தன் ஆதரவை தெரிவித்தார்.
பின், அவர் பேசியதாவது:
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத சம்பளம் 15,000 ரூபாய், மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு 7,000 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, சம்பளத்தை வழங்க வேண்டும். போராட்டம் நடத்துவோரை அரசு அழைத்து பேச வேண்டும். அமைதியான முறையில் போராடுவோரை துன்புறுத்தாதீர்கள்.
இதை பார்த்து கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாங்களும் இங்கு வந்து போராடுவோம். முதல்வர் சித்தராமையா, தனது பாக்கெட்டை மட்டும் நிரப்ப பார்க்கிறார். மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். எப்படியும் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா செல்ல போகிறார். இந்த நேரத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவினால், அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.