சி.எச்.ஓ.,க்களின் பணி நிரந்தரம் முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

மைசூரு,: ''சி.எச்.ஓ.,க்களின் பணி நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

அனைத்து கர்நாடக மாநில சமுதாய சுகாதார ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் மைசூரில் நேற்று முதன் முறையாக மாநில அளவிலான சி.எச்.ஓ., எனும் சமுதாய சுகாதார அதிகாரிகளின் பாதுகாப்பு மாநாட்டை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

முந்தைய அரசு, உங்களின் ஐந்து சதவீத ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எங்கள் அரசு, 2022 - 23ம் ஆண்டுக்கான நிலுவை ஊதியத்தை, ஐந்து சதவீதம் உயர்த்தி வழங்கும். உயிர் காப்பீடு ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் சுகாதார காப்பீடு வழங்கப்படும்.

உங்களை பணி நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கும். உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ''உங்களின் பணி, தேசிய சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் வருகிறது. உங்களின் பணியை நிரந்தரமாக்குவது தற்போதைக்கு கடினம். இது குறித்து மத்திய அரசுடன் விவாதிக்க வேண்டும். அனைவரும் தேசிய சுகாதார மிஷனின் கீழ் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement