போலீசாரை தாக்கி தப்ப முயற்சி கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு
மங்களூரு: கோடேகார் கூட்டுறவு வங்கிக் கொள்ளை வழக்கு தொடர்பாக கைதானவர், போலீசாரை தாக்கிவிட்டுத் தப்பியோட முயற்சித்தார். அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
தட்சிணகன்னடா, உல்லாளின் கோடேகார் கூட்டுறவு வங்கி உள்ளது. ஜனவரி 17ம் தேதி, பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்த மர்மகும்பல், ஊழியர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி, கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம், தங்க நகைகளை கொள்ளையடித்து, காரில் தப்பியது.
கொள்ளையர்களை கண்டுபிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள், கேரளா வழியாக தமிழகம் சென்றதை கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில், தமிழகத்தின் திருநெல்வேலி நீதிமன்றத்தில் முருகன், யோஷுவா ராஜேந்திரன், கண்ணன் மணி ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை பெங்களூரு அழைத்து வந்தனர். இவர்களிடம் இருந்து பணம், தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, மங்களூரு புறநகர், உல்லாளின், அஜ்ஜிநட்கே என்ற இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினர். நேற்று காலை துப்பாக்கியை மீட்க, முருகனை போலீசார் அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர், இன்ஸ்பெக்டரை உதைத்து விட்டு, தப்பியோட முயற்சித்தார். ஏட்டையும் தாக்கினார். இதனால் உல்லாள் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா துப்பாக்கியால் சுட்டதில், முருகனின் காலில் குண்டு பாய்ந்தது.
கீழே விழுந்த அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த ஏட்டு மஞ்சுநாத்தும் சிகிச்சை பெறுகிறார். இதற்கு முன்பு கண்ணன் மணியை, விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு அழைத்து வந்தபோது, போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயற்சித்தார். அவரையும் போலீசார் சுட்டுப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.