அரசு வேலைக்கான தேர்வு வினாத்தாள் ரூ.40 லட்சம்; விற்பனை செய்த 3 பேர் கைது
புனே: மஹாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போனில் அழைப்பு விடுத்து ரூ.40 லட்சத்திற்கு வினாத்தாள் விற்பனை செய்த 3 பேரை புனே போலீசார் கைது செய்தனர்.
எப்படியாவது அரசு வேலை பெற வேண்டும் வைராக்கியத்துடன் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். அவர்களுக்கு மத்தியில், ஏதாவது குறுக்கு வழியை பயன்படுத்தி வேலையில் பெற்ற விட முடியுமா என்று பார்ப்போரும் பலர் இருக்கின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி காசு சம்பாதிக்க மோசடி பேர்வழிகள் சுற்றி வருகின்றனர்.
அந்த வகையில், மஹாராஷ்டிரா பப்ளிக் கமிஷன் நடத்தும் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து ரூ.40 லட்சத்திற்கு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாக புனே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட தீபக் கயாராம் கெய்தானே, சுமித் கைலாஸ் ஜாதவ் மற்றும் யோகேஷ் சுரேந்திர வாக்மரே ஆகிய 3 பேரை புனே போலீசார் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் எத்தனை பேருக்கு வினாத்தாள் விற்பனை செய்தனர், அவர்கள் விற்பனை செய்தது உண்மையான வினாத்தாள் தானா, போலியான வினாத்தாளை காட்டி மோசடி செய்கிறார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.