இளம் இந்தியா மீண்டும் சாம்பியன்: பெண்கள் 'டி-20' உலக கோப்பையில்

கோலாலம்பூர்: 'டி-20' உலக கோப்பையில் (19 வயது) இந்திய பெண்கள் அணி மீண்டும் சாம்பியன் ஆனது. பைனலில், 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றது.


மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு சிமோன் லோரன்ஸ் (0), டயாரா ராம்லகன் (3), கேப்டன் கெய்லா ரெய்னக் (7) ஏமாற்றினர். மீகே வான் வோர்ஸ்ட் (23), ஜெம்மா போத்தா (16), பே கோவ்லிங் (15) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 82 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் திரிஷா 3, பருனிகா, ஆயுஷி, வைஷ்ணவி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி, திரிஷா ஜோடி துவக்கம் கொடுத்தது. கோவ்லிங் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த திரிஷா, சேஷ்னி வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது, தமிழகத்தின் கமலினி 8 ரன்னில் அவுட்டானார்.

ஆஷ்லீ வான் வைக் வீசிய 8 வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த சானிகா, மோனாலிசா லெகோடி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா (44 ரன், 8 பவுண்டரி), சானிகா (26 ரன், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகி (44* ரன், 3 விக்கெட்), தொடர் நாயகி (309 ரன், 7 விக்கெட்) விருதுகளை இந்தியாவின் திரிஷா வென்றார்.


இரண்டாவது முறை


பெண்களுக்கான (19 வயது) 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த 2023ல் நடந்த தென் ஆப்ரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த பைனலில், ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக கோப்பை வென்றிருந்தது.

Advertisement