இந்த 4 தூண்களை வலிமையாக்க உத்தரவாதம்: பிரதமர் மோடி

3

புதுடில்லி: 'வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நான்கு தூண்களை வலிமையாக்க நான் உத்தரவாதம் அளித்துள்ளேன். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் தான் இந்த 4 தூண்கள்' என பிரதமர் மோடி பேசினார்.



டில்லியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் ஆத் ஆத்மி அரசு நகரத்தை சீரழித்துவிட்டது. இந்த முறை டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைய போகிறது. பா.ஜ.,வின் கியாரண்டிகளுக்கும், ஆம் ஆத்மியின் பொய்யான வாக்குறுதிகளுக்கும் இடையே தேர்தல் போர் நடக்கிறது.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நான்கு தூண்களை வலிமையாக்க நான் உத்தரவாதம் அளித்துள்ளேன். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் தான் இந்த 4 தூண்கள்.


இந்தியாவின் வளர்ச்சியில் நமது நடுத்தர வர்க்கத்தினரின் பங்கு மகத்தானது. நடுத்தர வர்க்கத்தினரை மதித்து நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வெகுமதி அளிப்பது பா.ஜ., மட்டுமே. நேற்றைய பட்ஜெட்டுக்கு பிறகு நாடு முழுவதும் நடுத்தர வர்க்கத்தினருக்கான நட்பு ரீதியான பட்ஜெட் என பேசப்பட்டு வருகிறது.


நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் சம்பாதித்தால் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வரி கட்ட வேண்டியிருக்கும். பா.ஜ., அரசின் நேற்றைய பட்ஜெட்டுக்கு பிறகு, ஒரு வருடத்தில் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை. இந்திய வரலாற்றிலேயே நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட் இதுதான்.


இந்தியாவின் வளர்ச்சியில் நமது நடுத்தர வர்க்கத்தினரின் பங்களிப்பு அதிகம். 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10 வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நாட்டின் பொருளாதார சக்தி அதிகரித்து வருகிறது, பொருளாதாரத்தின் உயரம் அதிகரித்து வருகிறது.

குடிமக்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது. டில்லி மக்கள் அனைவரும் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்னைக்கும் முடிவு கட்ட நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement