பா.ஜ.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்; தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
புதுடில்லி: ஆம்ஆத்மி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டில்லி சட்டசபைக்கு வரும்(பிப்.) 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8ம் (பிப்.) தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்னிறுத்தி பா.ஜ.,வினர் தொடர்ந்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, ஆம்ஆத்மி கட்சியினர் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, ஆம்ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியினர் மீது பா.ஜ.,வினர் மற்றும் ரவுடிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெண் தொண்டர்களை தொந்தரவு செய்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.
இந்த நிலையில், தங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். முறையான பாதுகாப்பு வழங்காத போலீசாரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்திய அவர், தேர்தல் கண்காணிப்பாளர்களை புதுடில்லி தொகுதியில் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.