உலக சாதனை படைத்த ஆதியோகியின் பிரம்மாண்ட ஓவியம்!
கோவை: ஆதியோகி திருவுருச் சிலை முன்பு 16,368 சதுர அடியில், 4.5 டன் தேங்காய் ஓடுகளைக் கொண்டு ஆதியோகி திருவருவத்தின் பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டது. இந்த தலைசிறந்த படைப்பு உலக சாதனைகள் சமூகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 'கலா சாஸ்திரம்” என்ற கலைஞர்கள் குழு ஆதியோகிக்கும், தற்சமயம் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவிற்கும் கலையின் மூலம் ஒரு அஞ்சலி செலுத்தும் முயற்சியாக இந்த ஓவியத்தை வரைந்தனர்.
இது குறித்த டிரோன் படக் காட்சி ஈஷா அறக்கட்டளையின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த பதிவில், “மஹா கும்பமேளா நடைபெறும் இந்த புனிதமான மாதத்தின் போது, கோவை ஈஷா யோகா மையத்தில், கலா சாஸ்திரா குழுவின் கலைஞர்கள் 16,368 சதுர அடியில் ஆதியோகியின் பிரமிக்க வைக்கும் உருவப்படத்தை தரையில் உருவாக்கினர். முழுவதுமாக 4.5 டன் தேங்காய் ஒடுகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த தலைசிறந்த படைப்பு உலக சாதனைகள் சமூகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜன'20 முதல் 23 வரையிலான 4 நாட்களில் இந்த ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டது.” எனக் கூறப்பட்டு உள்ளது.
https://www.instagram.com/p/DFNqfgpycfA/
கலா சாஸ்திரம் அமைப்பின் நிறுவனர் ரோஹித் சோனி இக்கலை படைப்பு குறித்து பேசுகையில் “ஒரு குழுவாக, நாங்கள் எப்போதும் எங்களின் கலைப்படைப்புகளை ஆதியோகிக்கு வழங்க ஏங்கி இருக்கிறோம். மகா கும்பமேளாவிற்கு பயணிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த கலைப்படைப்பு ஆதியோகியின் ஆசீர்வாதமாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். இந்த படைப்பு, இங்கு நாங்கள் உணர்ந்த தெய்வீக பேரின்பத்தையும், ஆதியோகி வழங்கி இருக்கும் நல்வாழ்வுக்கான கருவிகளையும் பெற அதிகமான மக்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.
மேலும் இந்த ஓவியம் எவ்வாறு வரையப்பட்டது என்பது குறித்து அவர் கூறுகையில் “முதலில் தரையில் கட்டங்கள் உருவாக்கி அதில் ஆதியோகி திருவுருவத்தின் பகுதிகளை உருவாக்கினோம். பின்னர் தேங்காய் ஓடுகளை வைக்கத் தொடங்கினோம். முதலில் வெளிப்புற விளிம்புகளில் வைக்கத் துவங்கி பின்னர் மையத்தில் நிரப்பினோம். ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வலர்களும் எங்களுடன் சேர்ந்து உதவி செய்தனர், ஆதியோகியின் அருளால் அனைத்தும் ஒன்றிணைந்து அழகாக வந்துள்ளது.” எனக் கூறினார்.