கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: திட்டம் தீட்டிய மைத்துனர் கைது
லக்னோ: உ.பி.,யில் தனது மைத்துனியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து முசாபர்நகர் ரூரல் போலீஸ் எஸ்.பி., ஆதித்யா பன்சால் கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள நானு கால்வாய் அருகே ஜனவரி 21 அன்று, அடையாளம் காணப்பட்ட ஆஷிஷ், தனது மைத்துனியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதற்கு அவர், இரண்டு ஒப்பந்த கொலையாளிகளை பயன்படுத்தியுள்ளார். அதற்காக ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி , ரூ.10,000 முன்பணமாகவும், கொலைக்குப் பிறகு ரூ.20,000 கொடுத்துள்ளார்.
ஆஷிஷ், தனது மனைவியின் தங்கையுடன் உறவில் இருந்துள்ளார். அவள் தன்னை மிரட்டி பணம் பறிப்பதால் அவளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர் சுபம் என்பவரிடம் உதவி கோரினார், பின்னர் அவர் தீபக் என்ற மற்றொரு கூட்டாளியை அழைத்து வந்தார்.
அதை தொடர்ந்து 3 பேரும் அந்தப் பெண்ணை ஸ்கூட்டரில் கால்வாயில் அழைத்துச் சென்று, அவளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தாவணியால் கழுத்தை நெரித்து, பின்னர் பெட்ரோலை ஊற்றி எரித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஜனவரி 23 அவர் காணாமல் போனதாக புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் ஆஷிஷ் கடைசியாக சுபம் மற்றும் தீபக் ஆகியோருடன் காணப்பட்டதாக கண்டறிந்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆஷிஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தடயவியல் குழுக்கள் பாதிக்கப்பட்டவரின் உடல் பாகங்கள், எரிந்த ஆடைகள், ஒரு மோதிரம் மற்றும் பிற பொருட்களை சம்பவ இடத்திலிருந்து மீட்டனர்.
அனைத்து அறிவியல் ஆதாரங்களையும் சேகரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வோம்.
இவ்வாறு ஆதித்யா பன்சால் கூறினார்.