கடும் பனிமூட்டத்தால் கோல்கட்டாவில் விமான சேவை முடக்கம்
கோல்கட்டா: மோசமான வானிலையால் கோல்கட்டா விமான நிலையத்தில் 13 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதம் ஆனது.
கோல்கட்டாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இன்றும் (பிப்.2) வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதன் காரணமாக கோல்கட்டா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சாலைகளே தெரியாத அளவுக்கு பார்வை திறன் குறைந்தபடியால், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் காணப்படுகிறது.
13 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மோசமான வானிலை எதிரொலியாக சில விமானங்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் பிரவாத் ரஞ்சன் பெகுரியா கூறுகையில், மோசமான வானிலை நிலவுகிறது. பயணிகள் பாதுகாப்பு கருதி விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி பயணிகளுக்கும் தெரிவித்து விட்டோம் என்றார்.
முன்னதாக, கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலையால், ஜன 23ம் தேதி முதல் ஜன 25ம் தேதி வரை மொத்தம் 159 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது.