வர்த்தகப் போரை தொடங்கிய டிரம்ப்; உலக வர்த்தக அமைப்பை நாடும் சீனா

7


பெய்ஜிங்: தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா விதித்த வரியை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் முறையிட இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.


டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், சில மருந்து பொருட்களுக்கு 25% வரியையும், சீனா பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியையும் விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.


நமது குடிமக்களைக் கொல்லும் கொடிய மருந்துகளின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இந்த உத்தரவு சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.


அவரது இந்த நடவடிக்கையை தொடர்ந்து கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளன.


இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயலுக்கு சீனாவின் வர்த்தகத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கூறியதாவது: வர்த்தகம் மற்றும் கட்டணப் போரில் இதுவரையில் யாரும் வென்றதில்லை. அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான வரி விதிப்பு நடவடிக்கை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறிய செயலாகும். டிரம்ப்பின் இந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு முயற்சிகளில் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்படும். இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவோம், என தெரிவித்துள்ளது.

Advertisement