தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,

இசை என்ற கடலின் ஆழத்தை யாரும் கண்டதில்லை. பல கோடி ஓசைகளில் லட்சக்கணக்கான பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த ரசனையில் சில மாற்றத்துடன், நம்மை தாளம்போட வைத்த பாடல்களை 'மிக்ஸ்' செய்து இசை மேடைகளை அலற விடும் டி.ஜெ.,க்கள் (டிஸ்க் ஜாக்கி) வருகை அதிகரித்துள்ளது. ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள இத்துறையில், தமிழ் பாடல்களுக்கான முதல் பெண் டி.ஜெ.,வாக கலக்கி வருகிறார் சென்னை தீபிகா.

இன்ஸ்டாவில் இளைஞர் பட்டாளத்தை உசுப்பேத்தி வரும் ரீல்ஸ்களில் இவரது ரீல்ஸ்களும் அதிகம்.

எட்டு ஆண்டுகளில் தென்னாப்ரிக்கா, மலேசியா என 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சி நடத்தி தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்த வெற்றிப் பயணம் குறித்து டி.ஜெ., தீபிகா நம்மிடம்...

சென்னையில் படித்தேன். கணவர் நவீனும் டி.ஜெ., தான். 'டிஸ்க்'கில் பாடல் ஒலிக்க விட்டு இசைக் கலவைக்கு ஏற்ப டான்ஸூடன் ரசிகர்களை உற்சாகப்படுத்துபவர்கள் தான் டி.ஜெ.,க்கள்!

ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களை 'மிக்ஸ்' செய்யும் திறமை வேண்டும். தற்போது அலைபேசியில் 'செட்' செய்து நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது.

பிறந்த நாள், திருமணம், கார்ப்பரேட் கம்பெனி நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப பாடல்களை தேர்வு செய்து 'மிக்ஸ்' செய்து பாட வேண்டும். உதாரணமாக 'வாத்தி கம்மிங்' பாடலை துவங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி 'ஆளுமா டோலுமா' பாடலுக்கு மாற வேண்டும். இரண்டு பாடலுக்கும் இடைவெளியின்றி இசையை இணைக்கும் திறமை தான் டி.ஜெ.,யின் வெற்றி. எங்களின் 'டி.ஜெ.,ஸ் பார் யு' வில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல் 'டேட்டாபேஸ்' உள்ளது. தமிழில் இளையராஜா பாடல்களை மிக்ஸிங் செய்வது சவாலாக இருக்கும். புதிதாக எந்த பாடல் டிரெண்டிங்கில் உள்ளது என ஒவ்வொரு நாளும் தேடல்கள் தான் எங்கள் முதலீடு.

ஜி.வி., பிரகாஷ், பிரபுதேவா லைவ் நிகழ்ச்சிகளுக்கு டி.ஜெ., செய்துள்ளேன். 2024ல் ஐ.பி.எல்., நிகழ்ச்சியில் சி.எஸ்.கே., டீமிற்கு டி.ஜெ., செய்தது மறக்கமுடியாது. ஒரு பெண்ணாக என் சாதனைக்கு 12க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன.

டி.ஜெ.,க்கள் மார்டன் டிரஸ்களில் கலக்குவர். தமிழ் பாடல்களுக்காக சேலை கட்டி நிகழ்ச்சி நடத்தினேன். அது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. சேலை கட்டி டி.ஜெ., செய்ததை இசையமைப்பாளர் அனிருத் இன்ஸ்டாவில் ேஷர் செய்த பின் பிரபலமானேன்.

பெண்களால் முடியாதது இல்லை. தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். துணிச்சலாக இறங்கி செய்து முடிக்கும் எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இது தான் பெண்களுக்கான 'சக்சஸ் மந்த்ரா'.

இவ்வாறு கூறினார்.

Advertisement