பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்

ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லுாருக்கு இன்னொரு அடையாளமாக மாறியுள்ளார் பத்மஸ்ரீ விருதாளரான வேலு ஆசான். 40 ஆண்டுக்கு மேலாக எட்டுத்திக்கிலும் பறை இசைத்து கிராமப்புற இளசு முதல் நகரத்து பெருசுகள் வரை எல்லோரையும் ஆட வைக்கிறார் வேலு ஆசான். பிறவி பறையிசை கலைஞரான இவர்சிறு வயதிலே கிடைக்கும் பொருட்களில் எல்லாம் தாளம் இட்டு, இசையை ரசித்தவர். தீராத வறுமை துரத்திய போதும், விடாது ஓடி 'சமர் கலைக்குழுவை' ஏற்படுத்தி இன்று பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கி, சினிமா பாடல்களில் பறை இசைத்தும் வருகிறார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார். தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்துார் மேட்டமலையில் வசிக்கிறார். இவருக்கு 2025க்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கூறியதாவது: “என் இயற்பெயர் வேல்முருகன். என் தந்தை பறை வாசித்தார். அலங்காநல்லுாரில் ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு சாமி கும்பிடுவர். 5 நாள் திருவிழா. சாமி சிலை உருவாக்கும் போது உடையாமல் இருக்க அருள் ஏற்ற 28 நாள் வாசிப்பர். 30வது நாள் திருவிழா நடக்கும். ஊர்மக்கள் கூடி பார்ப்பர். நானும் சென்று பார்ப்பேன். பறையடிக்க ஆசை. எனக்கு அருள் வந்து ஆடுவதை சேவுகன் வாத்தியார் பார்த்து கையில் பறையை கொடுத்து அடிக்க கூறினார். அடித்தது பிடித்ததால் மற்ற நிகழ்வுகளுக்கும் அழைத்து சென்றனர். பறை இசைப்பது என் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை.
பறையை கையில் எடுக்க முடியாத நாட்களில் டெலிபோன் போஸ்ட் கம்பங்கள், தகர ஷீட்டுகள் உட்பட கையில் கிடைக்கும் பொருட்களில் தாளம் வாசிப்பேன். காதுகுத்து போன்ற விசேஷங்களுக்கும் வாசித்தேன். 5ம் வகுப்பு வரை தான் படித்தேன்.
இதை அடித்தால் வீட்டிற்கு வரக்கூடாது என உறவினர் கூறிவிட்டனர். பின் சைக்கிள் கடையில் பணிபுரிந்தேன். அங்கும் சிறு சிறு பொருட்களில் தாளம் அடிப்பேன். கொட்டுச்சத்தம் கேட்டாலும், பாட்டுச்சத்தம் கேட்டாலும் என்னை கட்டுப்படுத்த முடியாது. சர்க்கரை மில், உரக்கடை, லோடுமேன் என கிடைத்த வேலைகளை செய்தேன். மதுரை தனியார் மருத்துவமனையில் லிப்ட் பாய், வார்டு பாய் வேலைபார்த்தேன். வார்டு பாயாக இருந்த போது நோயாளிகளை ஸ்ட்ரக்சரில் தள்ளிக் கொண்டு போகும் போது பாட்டு கேட்டால் தாளம் போட்டு விடுவேன்.
புது ஆட்டம்
24 வயதில் திருமணம். வாழ்வாதாரத்திற்காக கோவை சென்றோம். ஊர்பிடிக்காமல் சொந்த ஊர் திரும்பினேன். வேலையே கதி என்றிருந்த அந்நாட்களுக்கு பின் மீண்டும் இசைக்க துவங்கிய போது பறை வாசிக்க வரவில்லை. பின் முருகன் வாத்தியாரிடம் புதிய அடி புதிய ஆட்டம் கற்றுக் கொண்டேன். எனக்கு பழைய அடி தான் தெரியும். ஆனால் புது அடி புது ஆட்டம் பழகிய பின் தான் பழைய அடிக்கு தான் வீரியம் இருந்தது புரிந்தது.
பின் சிறுவயதில் அடித்த பறையடியை நினைவு வைத்து அதே அடி ஆட்டத்தில் ஆடி புது யுத்தி கண்டுபிடித்து புதிய பறை ஆட்டத்தை வடிவமைத்தேன்.
மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லுாரி, 2004ல் தலித் கலை விழா, 2006ல் சென்னை சங்கமம் என பல்வேறு மேடைகளில் பறை இசைத்தோம். எங்களுக்கு ரசிகர் கூட்டம் ஏற்பட துவங்கியது. 2008ல் சீனா சென்று பரத நாட்டியம் ஆடி பறை இசைத்தோம். பின் சமர் கலைக்குழுவை ஏற்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன்.
பறை உணர்வை உருவாக்கிய கருவி. தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திய கருவி. வைத்தியப்பறை, செய்தி சொல்லும் பறை, காப்பாற்றும் பறை, அறிவிப்பு பறை, சிலம்பாட்ட பறை, திருவிழா பறை என சில வகைப்பாடுகள் உள்ளன.
பறை இசையின் அதிர்வு
வைத்தியப்பறை என்னவென்றால், அந்த காலத்தில் இறந்த 2 மணி நேரம் வரை உயிர் இருக்க வாய்ப்பிருப்பதால் பறையின் துடிப்பான இசையின் அதிர்வால் உயிர் வர வாய்ப்புள்ளது. அடித்தும் வரவில்லை என்றால் இறந்ததாக கருதப்படும். செய்தி சொல்லும் பறை என்றால் இறந்தவர் வீட்டில், அவரது வாழ்க்கையை கூறும் பறை. காப்பாற்றும் பறை என்றால் இறப்பு வீட்டில் பிறர் சோகத்தால் துவண்டு விடக்கூடாது. அடித்து ஆடி அவர்கள் கவனத்தை திசை திருப்புவதால் இது காப்பாற்றும் பறை.
அரசு அறிவிக்க அறிவிப்பு பறை, திருவிழாக்களுக்கு திருவிழா பறை என்கிறோம். இதை 'தப்பு' என்று கூறக்கூடாது. 'பறை' தான் சரியான சொல்.
உலக தமிழ் மக்கள் இந்த கலைக்கு உயிர் கொடுக்கின்றனர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் பறையிசையை வாசிக்கின்றனர். நான் இந்த நாடுகளுக்கெல்லாம் சென்றுள்ளேன்.
பறையிசை கலைஞராக வரவிருப்போருக்கு நான் கூற விரும்புவது கலையை நேசிப்பது தான். வித்தியாசமான முயற்சிகள், இணையத்தை பயன்படுத்தி முன்னேற அறிவுறுத்துகிறேன்.
பத்மஸ்ரீ விருது வரும் என கனவில் கூட நினைக்கவில்லை. மத்திய அரசுக்கு நன்றி. குட்டிப்புலி படத்தில் சிறு காட்சியில் நடித்தேன். கும்கி படத்தில் 'சொய் சொய்' பாடலுக்கு பறை இசைத்தேன். 'மக்க கலங்குதப்பா' பாடலில் விஜய் சேதுபதி என்னை ஆசான் என அழைத்தார். அவர் அழைத்த பின் வேலு ஆசான் என பலர் அழைத்தனர். பேட்ட, லால் சலாம், வேலாயுதம், மெர்சல், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களிலும் பறை இசைத்துள்ளேன் என்றார்.
மேலும்
-
வேகத்தடை அமைப்பு; பொதுமக்கள் நிம்மதி
-
500 பேருக்காவது தினமும் மதியம் சாப்பாடு தரணும்!
-
கிடப்பில் போடப்பட்ட 20 ஆண்டு கோரிக்கை... பனியன் மார்க்கெட்! நிறைவேற்ற தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
-
22ம் தேதி உலக தண்ணீர் தினம்; கிராமசபா கூட்டம் நடத்த உத்தரவு
-
பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு
-
குப்பை சேகரிக்கும் பணி; பின்தங்கிய திருப்பூர்!