'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ

1

ஆறாம் வகுப்பிலேயே வாய்பாட்டு அரங்கேற்றம் முடித்து மேடையில் பாட ஆரம்பித்து பரிசுகளை வாங்க ஆரம்பித்தேன். ஆயிரம் மேடைகளில் பாடிய அனுபவம் சிலிர்க்க வைக்கிறது என்கிறார் கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி பத்மஸ்ரீ சீனிவாசன்.

இவரது குரலில் பாடலை கேட்போர் மெய்மறந்து உருகிவிடுவர். பள்ளியில் படிக்கும் போதே பாட்டு, பரதம் என இருவழிப்பாதையில் பயணித்த கதையை விவரித்தார்.

பாட்டும் பரதமும் அரங்கேற்றம் செய்த கையோடு அமெரிக்காவில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். பின் பாட்டில் மட்டும் மனம் முழுமையாக லயித்து விட்டது. எம்.எஸ்சி., இயற்பியல் முடித்து பி.எச்டி., படிப்பை தேர்ந்தெடுத்தேன். படித்து கொண்டிருக்கும் போதே பாட்டு மட்டும் போதுமென இயற்பியலுக்கு விடை கொடுத்து 2007 ல் முழுமையாக இசையின் பக்கம் திரும்பினேன்.

பிறந்தது நெய்வேலி. பாட்டி சரோஜா ரெங்கராஜன் கச்சேரிகளில் பாடியுள்ளார். அம்மா சாந்தி கணக்கு ஆசிரியராக இருந்தாலும் கர்நாடக இசைப்பாடகி. இருவரிடமும் கற்று கொண்டாலும் குரு நெய்வேலியை ரெங்கநாயகி கோபாலனிடம் கற்றுகொண்டேன். திருச்சிக்கு இடம் மாறிய போது அம்புஜம் வேதாந்தத்திடம் 12 ஆண்டுகள் ராகம், கீர்த்தனைகளுடன் தனிக்கச்சேரி நடத்தும் அளவிற்கு கற்றுக் கொண்டேன். தற்போது வித்வான் சுந்தர்ராஜனிடம் அட்வான்ஸ் பயிற்சி பெருகிறேன். அவர் வயலின் வித்வானும் கூட.

எல்லா ராகங்களிலும் பாடுவேன் என்றாலும் சண்முகப்ரியா ராகம் என் மனதுக்கு நெருக்கமானது. அந்த ராகம் பாடும்போதே 'பவர்புல்லாக' இருக்கும். 'சரவணபவ எனும் திருமந்திரம்' பாட்டை சண்முகப்ரியாவில் பாடும் போது கம்பீரமாக இருக்கும்.

சந்தோஷமாக இருக்கும் போது பஜன் பாடல்களை கேட்பேன். கர்நாடக இசை சார்ந்து கேட்கும் போது தனி உற்சாகம் ஏற்படும். ஜதியும் ஸ்வரமும் கலந்து சரணத்தில் சாஹித்யம் கலந்து வரும் தில்லானா பாடல்கள் பிடிக்கும். பாடகர்கள் லால்குடி ஜெயராமன், பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானாவை விரும்பி கேட்பேன். கச்சேரியின் கடைசியில் தில்லானா பாடுவது இனிமையாக இருக்கும். பார்வையாளர்கள் உற்சாகமாக கேட்டு ரசிப்பர்.

கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பஜகோவிந்தம், ஸ்லோகம், அன்னமாச்சார்யா கீர்த்தனை உட்பட தெய்வீக பாடல்கள், டி.கே.பட்டம்மாளின் ரெங்கநாயகம் உட்பட சவுககாலா கீர்த்தனைகள் பிடிக்கும். ஒவ்வொரு பாடகரிடம் கற்ற கலையை பயன்படுத்தி மேடையில் அதிகபட்சமாக 3 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி நடத்தியுள்ளேன். பக்கவாத்திய குழுவினருடன் போட்டி போட்டு பாடும் போது உற்சாகம் தரும். எப்போதும் முணுமுணுக்கும் பாடல் தீட்சதரின் நாயகி ராகத்தில் 'ரெங்கநாயகம் பாவையே' பாடல் தான்.

எந்த கலையாக இருந்தாலும் குரு பக்தி முக்கியம், நிறைய பயிற்சி வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். ரசிகர்களை ஏமாற்றாமல் உற்சாகத்துடன் வைப்பதும் ஒரு கலை தான் என்றார்.

Advertisement