அபிஷேக் அதிரடி... இந்திய பவுலர்கள் சரவெடி; 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் 150 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இதில், முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு, இளம்வீரர் அபிஷேக் அதிரடி காட்டினார். அவர் 17 பந்துகளில் அரைசதமும், 37 பந்துகளில் சதமும் அடித்து சாதனை படைத்தார். அதிவேகமாக சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். தென்னாப்ரிக்காவின் மில்லர், இந்தியாவின் ரோகித் ஷர்மா ஆகியோர் முதலிடத்தில் (35 பந்துகள்) உள்ளனர். அபிஷேக் ஷர்மா குவித்த 135 ரன்களின் உதவியினால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். இதனால், அந்த அணி 97 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக, பிலிப் சால்ட் 55 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Advertisement