மாமல்லை அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2008 முதல் இயங்கி வருகிறது. அதற்கு முன் இப்பள்ளி 1910ல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக துவக்கப்பட்டு இயங்கியது.
தொடக்கப்பள்ளியாக இயங்க துவங்கி, 115 ஆண்டுகள் கடந்த நிலையில், பள்ளியின் நுாற்றாண்டுவிழா, நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் ஆசிரியர்கள், மேள தாள முழக்கத்துடன், பேரூராட்சி அலுவலக பகுதியிலிருந்து, ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.
பள்ளியில், தலைமையாசிரியை லதா தலைமையில் நடந்த விழாவில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, தேசியக் கொடியேற்றினார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும், சுதந்திரத்திற்கு பிந்தைய நாட்டின் கல்வி நடைமுறைக்கும் முன் துவக்கப்பட்ட இப்பள்ளியின் உருவாக்க சூழலை விவரித்தார்.
திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், பள்ளியின் முன்னாள் மாணவருமான கோதண்டபாணி, நுாற்றாண்டு விழா சுடரை ஏற்றி, பள்ளிக்கல்வி சூழல், அடிப்படை கல்வி அளித்த பள்ளியையும் போற்றி நெகிழ்ந்தார்.
இப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களை கவுரவித்து, நினைவுப்பரிசு அளித்தனர்.