அரசு பணி தேர்வு வினாத்தாள் ரூ.40 லட்சத்துக்கு விற்பனையா?
நாக்பூர் : மஹாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணைய வினாத்தாள், 40 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்திய போலீசார், இருவரை கைது செய்துள்ளனர்.
மஹாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் - பி தேர்வுக்கான முதல்நிலை தேர்வை நேற்று நடத்தியது.
இந்த தேர்வுக்கு 2,86,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவில், 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் குரூப் - பி பணிக்கான வினாத்தாளை தருவதாக ஒருவர் பேசுகிறார்.
இதுபற்றி அறிந்த தேர்வாணைய அதிகாரிகள், வினாத்தாள் மோசடி ஆடியோ தொடர்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புனே போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தி, அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் பாலகாட் பகுதியைச் சேர்ந்த தீபக் சகாரே, 25, பாந்த்ராவைச் சேர்ந்த யோகேஷ் வகமாரே, 28, ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
ஆஷிஷ், பிரதீப் குல்பே ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
மோசடி தொடர்பாக மஹாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வாணைய செயலர் சுவர கரத், கூறுகையில், ''வினாத்தாள் எதுவும் கசியவில்லை. அவை பாதுகாப்பாக உள்ளன. தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதால் தேர்வர்கள் கவலையடையத் தேவையில்லை.
''வினாத்தாள் கசிவு பற்றி தெரியவந்தால் பணியாளர் தேர்வாணைய இ - மெயிலில் புகார் அளிக்கலாம்,” என தெரிவித்தார்.