ஓசூரில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் கிரஷர் ஓனர்ஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு


ஓசூர்: ஓசூரில், கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் மற்றும் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், நேற்று உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, இன்று முதல் லாரிகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள, 42 க்கும் மேற்பட்ட கிரஷர்களில், ஒரு டன் ஜல்லி, 400 ரூபாய்க்கும், எம்.சாண்ட், 600 க்கும், பி.சாண்ட், 700 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஜல்லி, எம்.சாண்ட் விலையை டன்னுக்கு, 200 ரூபாய் வரையும், பி.சாண்ட் விலையை, 225 ரூபாய் வரையும், கிரஷர் உரிமையாளர்கள் சமீபத்தில் உயர்த்தினர். லாரி உரிமையாளர்கள், 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் விலையை குறைக்கவில்லை. ஆனால், கிரஷர் உரிமையாளர்கள் தங்களது சொந்த லாரிகள் மூலம் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்டை, கட்டட உரிமையாளர்களுக்கு நேரடியாக பழைய விலைக்கே வழங்கி வந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் கர்நாடகா மாநில எல்லையிலுள்ள, 1500 க்கும் மேற்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகளை ஆங்காங்கு நிறுத்தினர். இதனால் கட்டுமான பணி பாதிக்கும் நிலை உருவானது. இந்நிலையில், ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் மற்றும் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. அதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, இன்று (பிப்.3) முதல், லாரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் தலைவர் சம்பங்கி, தென்னிந்திய மோட்டார் சங்க பொதுச்

செயலாளர் சண்முகப்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் மீது டன்னுக்கு, 80 ரூபாய் மட்டுமே விலையை உயர்த்துவது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதேபோல், குறைவான விலையில், தங்களது லாரிகளில் கட்டுமான பொருட்களை அனுப்புவதில்லை என, கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழக, கர்நாடகா மாநில எல்லையிலுள்ள லாரி உரிமையாளர்கள், கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. இன்று (பிப்.3) முதல், லாரிகள் வழக்கம் போல் ஓடும். தமிழகத்திற்குள் கனிமவளங்களை அனுப்பும் போது ஒரு டன்னுக்கு, 10 சதவீதமும், பிற மாநிலங்களுக்கு அனுப்பும் போது, 55 சதவீதம் வரையும் பசுமை வரியை அரசிற்கு செலுத்துகிறோம். போலி அனுமதி சீட்டு மூலமாக, லாரிகளில் கனிமவளங்கள் கடத்துவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. மாநிலங்களுக்கிடையே கனிமவளங்களை எடுத்து செல்லலாம் என, மத்திய அரசின் விதிமுறை உள்ளதால், அதிகாரிகள், லாரிகளை தடுத்து நிறுத்தி தொந்தரவு கொடுக்கக்கூடாது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் துணைத்தலைவர் மது, பொருளாளர் ஆனந்த், செயலாளர் பிரேம்நாத், இணை செயலாளர் சீனிவாசமூர்த்தி, பிரகாஷ்ரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement