வேங்கை வயல் வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்பு: வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
புதுக்கோட்டை: வேங்கை வயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதில், அதே ஊரை சேர்ந்த மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளான வி.சி.க., மார்க்சிஸ்ட் கட்சியினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை ரத்து செய்ய வேண்டும் என கோரி, கனகராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இது போல சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டதில், இந்த வழக்கு, பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராததால், வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
இரு தரப்பினரும் வாதங்களை முன் வைத்தனர். இந்த வழக்கில் இன்று (பிப்.,03) தீர்ப்பு அளிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இது வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.