கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மூதாட்டியிடம் 19 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் பறிப்பு
ஈரோடு: ஈரோட்டில் இரவில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 19 பவுன் நகை, 45 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஈரோடு கள்ளுக்கடை மேடு அண்ணாமலை பிள்ளை வீதியை சேர்ந்தவர் மணி. இவர் மனைவி சாவித்திரி, 70. மணி உயிருடன் இல்லை.
இவர்களுக்கு குழந்தை இல்லை. இவருக்கு நான்கு வீடுகள் சொந்தமாக உள்ளது. ஒரு வீட்டில் சாவித்திரி வசிக்கிறார். நேற்று முன் தினம் இரவு 8:00 மணியளவில், வெள்ளை நிற ஸ்விப்ட் காரில் வந்த இருவர், வாடகைக்கு வீடு கேட்பது போன்று மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து வீட்டுக்குள் சென்றனர்.
அங்கு கத்தியை மூதாட்டியின் கழுத்தில் வைத்து அவரது கழுத்தில் இருந்த, 19 பவுன் தங்க செயின், வீட்டிலிருந்த, 45 ஆயிரம் ரூபாயை கண் இமைக்கும் நேரத்தில் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
மூதாட்டி தனியாக வசிப்பதும், கழுத்தில் தங்க நகை அணிந்து இருந்ததையும் கவனித்த நபர்கள் தான் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.