மருத்துவ மாணவியரிடம் அத்துமீறல் சேலத்தில் விசாகா கமிட்டி விசாரணைq
சேலம்: சேலம் இரும்பாலை அரசு மருத்துவக்கல்லுாரியில், உயிர் வேதியியல் துறையில், ஆய்வக தொழில் நுட்பனராக வேலை செய்யும் ஒருவர், ஆய்வக தொழில்நுட்பம் பயிலும் மாணவியரிடம், 'பேடு டச்' செய்து பேசுவதும், அதற்கு மாணவியர் எச்சரித்தும், அலட்சியமாக பதிலளிப்பதாக, கல்லுாரி டீனுக்கு புகார் சென்றது.
அதன் எதிரொலியாக,
கல்லுாரி விசாகா கமிட்டி சேர்மன் சுபா தலைமையில், 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அடங்கிய குழுவினர், கடந்த, 31ல், மருத்துவக்கல்லுாரியில், மாணவியரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இன்றும் விசாரணை நடக்கிறது.
மேலும், மாணவியரிடம் முழு விசாரணை முடிந்த பின், ஆய்வக தொழில்நுட்பனரிடம் தனியாக விசாரிக்கப்படும் என விசாகா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி உயிர்வேதியியல் துறை தலைவர் ரங்கராஜன் கூறுகையில், ''கல்லுாரி டீன், துணை முதல்வரிடம் கேளுங்கள், நான் எதுவும் சொல்லக்கூடாது,'' என்றார்.
டீன் தேவிமீனாள் கூறுகையில், ''விசாரணையே இப்போது தான் தொடங்கி உள்ளது. அதற்குள் எந்த விபரத்தை சொல்வது. விசாரணை முடிவில் உண்மைத்தன்மை தெரிந்த பின், தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.