மூடப்பட்டது யு.எஸ்., எய்ட் நிறுவனம்; டிரம்ப் அடுத்த அதிரடி

6

வாஷிங்டன்: அமெரிக்க அரசு சார்பில் உலகம் முழுவதும் செயல்பட்டு வந்த தொண்டு நிறுவனமான யு.எஸ்., எய்ட் தலைமையகம் மூடப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள யு.எஸ்., எய்ட் என்னும் தொண்டு நிறுவனம் 1961ம் ஆண்டு ஜான் கென்னடி அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் மனிதாபிமான அடிப்படையில் ஆன உதவிப்பணிகளுக்காக, உருவாக்கப்பட்டது.
இந்த தொண்டு நிறுவனத்தின் ஆண்டு பட்ஜெட் ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஆகும். இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் அளிக்கப்படுகிறது.

இவ்வளவு பெரிய தொண்டு நிறுவனமான யு.எஸ்., எய்ட்,
மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள தலைமையகம் மூடப்பட்டதுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு இ.மெயிலில் கேட்டுக்கொள்ளப்பட்டனர். தலைமையகத்தின் சுவர்களில் உள்ள லோகோ மற்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும் அதன் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்த திடீர் நடவடிக்கைகளால்,இந்த தொண்டு நிறுவனத்தின் நிதி உதவி பெற்று நேரடியாகவும் மறைமுகமாகவும், பல்வேறு உலக நாடுகளில் வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

முன்னதாக, இந்த தொண்டு நிறுவனம் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார். அதை ஏற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுவனத்தை மூடுவதற்கு கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எலான் மஸ்க் எக்ஸ் ஸ்பேசஸ் வலைதளத்தில் நடந்த உரையாடலில் கூறியதாவது:

யு.எஸ்.ஏ.ஐ.டி., விஷயங்களைப் பொறுத்தவரை, நான் அதிபருடன் விரிவாக விவாதித்தேன். அதை மூட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். இந்நிலையில் டிரம்ப் ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகள் தேவை இன்றி இருப்பதாகவும், அதன் ஊழியர்களுக்கு வெட்டியாக சம்பளம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டிய அதிபர் டிரம்ப், திறன் மேம்பாட்டு துறை ஏற்படுத்தியுள்ளார்.


எந்தெந்த துறைகளை வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த துறைகளை மூடி விடலாம், இருக்கும் ஊழியர்களை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வதுதான் இந்த புதிய துறையின் வேலை.அதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை நியமித்துள்ளார்.

இப்படி தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு துறையின் ஊழியர்கள், சில நாட்களுக்கு முன், யுஎஸ் எய்ட் தொண்டு நிறுவனத்துக்குள் சென்று ஆய்வு செய்ய முயற்சித்தபோது அதன் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வாறு தடுத்து நிறுத்திய அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் பணியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement