வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம் பறித்த ஐந்து பேர் கும்பல் கைது
அன்னுார்; வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக தாக்கி, மொபைல் மற்றும் பணம் பறித்த அன்னுாரைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 39. இவர் கெம்பநாயக்கன்பாளையத்தில் தனியார் ஸ்டீல் கம்பெனியில் ஐந்தாண்டுகளாக தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் சக தொழிலாளர்கள் ராகேஷ், ராஜேஷ் நிசாத், சஞ்சய் ஆகியோருடன் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, மூன்று மொபைல்களை பறித்து, சரமாரியாக தாக்கி உள்ளது. பின்னர் சுபாஷை மிரட்டி ஒருவர் தனது காதலியின் மொபைலுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஜிபே செய்துள்ளார். இதன் பிறகு அந்த ஐந்து பேர் கும்பல் தப்பியது.
அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் தொடர்புடைய, கிருஷ்ண கவுண்டன் புதுார் ,கமலேஷ், 22. கெம்பநாயக்கன்பாளையம், லோகேஷ், 24. விஜய், 22. சந்தோஷ் குமார், 22. பூபதி, 22 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மூன்று மொபைல்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய், தாக்குதலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டன. தாக்குதலுக்குள்ளான சுபாஷ் அன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிடிபட்ட ஐந்து பேரும் அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.