ராகுல் போதுமான தகுதி பெற்றவர் அல்ல: நிர்மலா சீதாராமன் பேட்டி

32


புதுடில்லி: 'இந்திய பொருளாதாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு தகுதி இல்லை' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

'உற்பத்தித் துறையில் கடந்த 2010ல் 15.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி வீதம், தற்போது 12.6 சதவீதமாக குறைந்துவிட்டது. சிறந்த நிறுவனங்களெல்லாம் இருந்தும், உற்பத்தி ஒழுங்குமுறையை சீனாவிடம் ஒப்படைத்து விட்டோம்,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:


இந்திய பொருளாதாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு தகுதி இல்லை. அவர் போதுமான தகுதி பெற்றவர் அல்ல. அவருக்கு முட்டாள்தனமான தன்னம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவின் உற்பத்தி துறையை வலுப்படுத்த அவர்கள் தவறி விட்டார்கள். உங்கள் ஆட்சியின் போது, ​​நீங்கள் சீனாவுக்குச் சென்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள். அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஏன் வெளியிடவில்லை?

காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து சீனா எவ்வளவு நிலத்தை எடுத்தது என்பது பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை? உங்கள் ஆட்சியின் பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு யூனிட்டையாவது உருவாக்கினீர்களா?



பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, அவர்கள் விட்டுச்சென்ற பிரச்னையை சரி செய்ய நாங்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் செலவிட்டோம். பொருளாதாரத்தில் 5ம் இடத்திற்கு முன்னேறினோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மூன்றாவது இடத்தை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement