கிராமி விருது வென்ற தமிழ்ப்பெண் சந்திரிகா; சென்னை வானொலியில் இசை கேட்டு வளர்ந்ததாக பெருமிதம்!

1


சென்னை: சென்னையில் பிறந்த சந்திரிகா டாண்டன் கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார். இவர் பெப்சி நிறுவன முன்னாள் தலைவர் இந்திரா நூயியின் சகோதரி.

சர்வதேச அளவில் இசைத் துறையில் மிகப்பெரிய கவுரமாக கருதப்படுவது கிராமி விருது. பாப், ராக், நாட்டுப்புற இசை, ஜாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 67வது கிராமி விருது விழா மற்றும் கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டாண்டன் விருது வென்றுள்ளார். அவரது, 'திரிவேணி' இசை ஆல்பம், 'சிறந்த தற்கால ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது. சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் தான் சந்திரிகா.

யார் இந்த சந்திரிகா டாண்டன்?




* சென்னையில் சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் பிறந்தார். இவருக்கு வயது 71.



* இவர் 1954ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.


* இவர் பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார்.


* பட்டப் படிப்பிற்கு பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த டாண்டன் தொழில்துறையில் சிறந்து விளங்கினார்.


* கடந்த 2005ம் ஆண்டில் Soul chants music என்ற இசை லேபிள் நிறுவனத்தை துவங்கினார்.


* அமெரிக்காவின் kennedy center, lincoln center, times square ஆகிய இடங்களில் பாடல்கள் பாடி வரவேற்பைப் பெற்றுள்ளார்.
* நியூயார்க், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள சந்திரிகா டாண்டன் அமெரிக்கா கலை மற்றும் அறிவியல் அகாடமியில் உறுப்பினராக உள்ளார்.

கிராமி விருது பெற்றது குறித்து, சந்திரிகா டாண்டன் கூறியதாவது: இசை என்பது காதல், ஒளி, சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி மற்றும் சிரிப்பால் சூழப்பட்டிருப்போம். நான் இசை மூலம் என் திறமையை கண்டுபிடித்தேன், என்றார்.



முதலில் வங்கி பணியில் சேர்ந்த அவர், பின்னர் மெக்கன்சி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தார். தொடர்ந்து தனது சொந்த நிதி ஆலோசனை நிறுவனத்தை துவக்கினார். கொடையாளராக செயல்பட்டு வரும் அவர், இப்போது கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார்.



தான் எப்போது இசையை கேட்கத் தொடங்கினேன் என்பது பற்றி சந்திரிகா சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். 'சென்னையில் வசித்தபோது ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தான் நான் கேட்ட முதல் இசை.


அப்போது சென்னையில் இரண்டு வானொலி நிலையங்கள் இருந்தன. அவற்றின் மூலமாகவே இசை கேட்டு பழகினேன். என் தாயார் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வானொலி கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இசை எனக்கு அறிமுகம் ஆனது' என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்.

Advertisement