ரொம்ப சந்தோஷமா இருக்கு; சாம்பியன் பட்டத்துடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா பேட்டி

15


சென்னை: பெருமை வாய்ந்த டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றது சந்தோஷமா இருக்கிறது என சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

நெதர்லாந்து செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். சக வீரரான உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்திற்கு பிரக்ஞானந்தா வந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


பின்னர் நிருபர்கள் சந்திப்பில், பிரக்ஞானந்தா கூறியதாவது: பெருமை வாய்ந்த டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றது சந்தோஷமா இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் பங்கேற்ற முதல் போட்டியிலே முதல் இடத்தை பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.


வரும் ஆண்டில் நிறைய செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. செஸ் போட்டியில் விளையாடும் போது மகிழ்ச்சியாக இருந்தது. டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பைனல் சுற்று விளையாடும் போது, ரொம்ப டென்ஷனாக இருந்தது.


போட்டியின் போது முடிவெடுக்க குறைவான நேரமே இருந்தது. எந்த நொடியிலும் ஆட்டம் மாறலாம் என்ற நிலை இருந்தது. 2024ல் என்னால் சரியாக பர்பாமன்ஸ் செய்ய முடியவில்லை. இந்தாண்டு தொடக்கத்திலேயே எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement