அரசு பஸ்சில் ரீல்ஸ் வீடியோ; டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்!

11


சென்னை: சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.


இளைய தலைமுறை மத்தியில் ரீல்ஸ் மோகத்துக்கு பஞ்சமில்லை. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதை வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


சில நேரங்களில் விளையாட்டாக எடுக்கப்படும் ரீல்ஸ் வீடியோக்கள் வினையில் முடிவது உண்டு. அப்படித்தான் சென்னையில் பணியின் போது பஸ்சை ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.


சென்னை வடபழநியில் மாநகர பஸ்சை அதன் டிரைவர் இயக்கிய படி சென்றுள்ளார். அவரின் அருகில் கையில் செல்போனுடன் வந்த கண்டக்டர், அந்த காட்சியை ரீல்ஸ் வீடியோவாக எடுத்துள்ளார். அதோடு நிற்காமல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.


இந்த ரீல்ஸ் வீடியோ வைரலானதோடு பணியில் இருக்கும் போது டிரைவர், கண்டக்டர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்தது. இந்த வீடியோ போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கவனத்துக்குச் சென்றது. அவர்கள் நடத்திய விசாரணையில் பணியின் போது செல்போன் இயக்கி ரீல்ஸ் எடுத்தது தெரிய வந்தது.


வீடியோ விவகாரம் வைரல் ஆனதை அடுத்து, அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் இருவரும் பணிநீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களான இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement