மாதவரம் மெட்ரோ ரயில் பாதை பணிக்காக எம்.எம்.காலனி மக்கள் வெளியேற ' கெடு '

சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இடம் வழங்க வசதியாக, சென்னை மாதவரம் எம்.எம்.காலனியில் வசிப்போர், மே 31க்குள் வெளியே வேண்டும். வெளியேறாவிட்டால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணைக்கு அருகில், கடந்த 1959ம் ஆண்டு மாட்டுக் கொட்டகை அமைக்க அரசு நிலம் ஒதுக்கியது. அதன் அருகில், மாடு வளர்ப்போர் தங்க வசதியாக, எம்.எம்.காலனி உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, இந்த குடியிருப்புவாசிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி, நிலத்தை காலி செய்து கொடுக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம், அரசை கேட்டுக்கொண்டது. அதன்படி, நிலத்தை காலி செய்ய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த லட்சுமி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'ஆவின் நிறுவனத்திற்கு மனுதாரர்கள் யாரும் பால் வழங்குவது இல்லை.

ஏற்கனவே, மாடுகள், நிலத்துக்கு இழப்பீட்டை பெற்றுள்ளனர். இந்த குடியிருப்புகளுக்கு மனுதாரர்கள் எந்த உரிமையும் கோர முடியாது' என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, 'வரும் மே 31க்குள், மாதவரம் எம்.எம்.காலனி இடத்தை, அங்கு குடியிருப்போர் காலி செய்து கொடுக்க வேண்டும்.

நிலத்தை காலி செய்ய மறுத்தால், அரசு அவர்களை காலி செய்ய, சட்ட நடவடிக்கை எடுக்கலாம்' என்று உத்தரவிட்டார்.

Advertisement