தமிழக ஜோடிக்கு வெள்ளி * தேசிய விளையாட்டில் அபாரம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3847745.jpg?width=1000&height=625)
டேராடூன்: தேசிய விளையாட்டு யோகாசன போட்டியில் தமிழகத்தின் தர்ம தேஜா, அபினேஷ் குமார் ஜோடி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. முதலில் காட்சி போட்டியாக சேர்க்கப்பட்டு இருந்த யோகாசனம், மல்லாகம்பிற்கு, பதக்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து ஆண்களுக்கான யோகாசன போட்டி நடந்தன. இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணியின் தர்ம தேஜா, அபினேஷ் குமார் ஜோடி இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
பெண்கள் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் வைஷ்ணவி, மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
படகு வலித்தல் போட்டியில் தமிழகத்தின் பகவதி, மதுமிதா, அகிலாண்டேஷ்வரி, ரோஸ் மஸ்டிகா இடம் பெற்ற அணி, 2 கி.மீ., துாரத்தை 7 நிமிடம், 46.37 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
தீபாக்சி அபாரம்
பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் வில்வித்தையில் ஹரியானாவின் தீபாக்சிகா தங்கம் கைப்பற்றினார். பஞ்சாப்பின் பர்னீத் கவுர், அவ்னீத் கவுருக்கு வெள்ளி, வெண்கலம் கிடைத்தன. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தானின் ரஜத் சவுகான் (தங்கம்), காஷ்மீரின் ஹிருதிக் சர்மா (வெள்ளி), ஆந்திராவின் மணி ரத்னம் (வெண்கலம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான பீச் வாலிபால் போட்டியில் தமிழக அணி 2-1 என கோவாவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. தமிழக பெண்கள் அணி 2-0 என புதுச்சேரியை வென்று, பைனலுக்கு நுழைந்தது.
சுருச்சி 'தங்கம்'
பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் துப்பாக்கிசுடுதலில் ஹரியானாவின் சுருச்சி (245.7 புள்ளி), பாலக் (243.6) தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர். பஞ்சாப்பின் சிம்ரன்பிரீத் கவுர் (218.8) வெண்கலம் கைப்பற்றினார்.