கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்,: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் செவந்தாம்பாளையத்திலுள்ள தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கிராம ஊழியர்கள் சங்க திருப்பூர் தெற்கு வட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கிராம ஊழியர்கள் பத்து பேர், தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து, மதியம், 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்; கிராம ஊழியர் உயிரிழந்தால், வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.

சி.பி.எஸ்., திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நிரந்தர சி.பி.எஸ்.என்., வழங்கவேண்டும். கிராம ஊழியர்களை, வேறு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement