மனைவியின் காதலனை கொன்று மகனுடன் தலைமறைவான தந்தை 

கோவை:கோவையில், தன் மனைவியின் காதலனை கொன்றுவிட்டு, மகனுடன் தலைமறைவானவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 45, இரும்பு, 'கிரில்' செய்யும் தொழில் செய்பவர். இவரது மனைவி, மதுரையைச் சேர்ந்த வாணிபிரியா, 40. தம்பதிக்கு, 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை பிரிந்த வாணிபிரியா, குழந்தைகளுடன் சின்னியம்பாளையம், ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கிறார்.

இந்நிலையில், சின்னியம்பாளையம், ஆசிரியர் காலனியில் தங்கி, பி.வி.சி., கதவு வேலை செய்யும் மகேந்திரன், 44, என்பவருக்கும், வாணிபிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது பிரபாகரனுக்கு தெரிந்தது.

நேற்று காலை, வாணிபிரியா வீட்டில் மகேந்திரன் இருந்தபோது, அங்கு வந்த பிரபாகரன், அரிவாளால் மகேந்திரன் கழுத்துப்பகுதியில் வெட்டினார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவியையும் தோள், கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு, அங்கிருந்த, 10 வயது மகனை அழைத்துக் கொண்டு தப்பினார்.

தகவல் அறிந்த வாணிபிரியாவின் தோழி, பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் காயம்அடைந்த வாணிபிரியாவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மகேந்திரனின் உடலைக் கைப்பற்றி, தப்பிய பிரபாகரனை தேடி வருகின்றனர்.

Advertisement