காதலர் தின கொண்டாட்டம் கொய் மலர்களுக்கு கிராக்கி

குன்னுார்:காதலர் தினம் பிப்.14ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், நீலகிரியில் கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார், கோத்தகிரி, ஊட்டி உட்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பிப்.,14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அதில், 10 மலர்கள் கொண்ட லில்லியம் ஏசியாடிக் மலர் கொத்து, 300 ரூபாய், ஓரியன்டல் கொத்து, 700 ரூபாய், கார்னேஷன், 200 ரூபாய் வரை விற்பனையாகின்றன. ஜெர்பரா ஒரு மலர், 4 ரூபாய் என விற்கப்படுகிறது.

நீலகிரி மாவட்ட கொய்மலர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வாஹிப்சேட் கூறுகையில், ''காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர்கள் விலை உயர்ந்து வருகிறது.

ஓசூரில் விளையும் ரோஜா மலரில் நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் குறைந்தது.

''இதனால், நீலகிரியில் விளையும் லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா போன்ற கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

காதலர் தினத்திற்கு விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வருகிறோம்,'' என்றார்.

Advertisement