குஜராத்தில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த 2 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
ஆமதாபாத்: குஜராத்தில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் 2 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குஜராத் மாநிலம், சூரத்தில் ஒரு கிராமத்தில், திறந்திருந்த பாதாள சாக்கடையில் 2 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். அவனை உறவினர்கள் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க நீண்ட நேரமாக போராடி வருகின்றனர். இது குறித்து தலைமை மீட்பு படை அதிகாரி பசந்த் பரிக் கூறியதாவது: கனரக வாகனம் சென்றதால், சாலையில் இருந்த பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்தது. இதில் 2 வயது சிறுவன் விழுந்துள்ளான்.
100 முதல் 150 மீட்டர் வரை தேடி விட்டோம். சிறுவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடுதல் பணி நடந்து வருகிறது. 70 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறுவனை மீட்க நேரம் எடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.