தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி

11

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஆம் ஆத்மி நம்பவில்லை என்றும், 4வது முறையாக கெஜ்ரிவால் மீண்டும் வருவார் என்றும் ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது.



டில்லி சட்டசபைக்கு ஓட்டுப்பதிவு நேற்று அமைதியுடன் முடிந்தது. நேற்றிரவு நிலவரப்படி, 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக, 27 ஆண்டு இடைவெளிக்குப் பின், தலைநகர் டில்லியில் பா.ஜ.,வின் ஆட்சி அமைய உள்ளதாக, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன.


இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா கூறியதாவது: 2015, 2020ம் ஆண்டுகள் நடந்த தேர்தல்களில் எங்களது கட்சியை குறைத்து மதிப்பிட்டார்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்றோம். எந்த எக்ஸிட் போல்களையும் பாருங்கள். ஆம் ஆத்மி கட்சி எப்போதும் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களைப் பெறுவதாகக் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் உண்மையான முடிவுகளில், நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் நான்காவது முறையாக முதல்வராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement