அரசு மணல் குவாரி திறக்க லாரி உரிமையாளர்கள் மனு

திருச்சி:தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும், என்று திருச்சியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து, சங்கத் தலைவர் வேலு, துணைத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் சங்கர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரி மற்றும் கிடங்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமலாக்கத் துறையினர் சோதனையிட்டனர். அதன் பின், அனைத்து அரசு மணல் குவாரிகளும், கிடங்குகளும் இயக்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், 20,000க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் வேலை இழந்துள்ளன.

அதை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குவாரிகள் இயங்காததால், கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்தி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற செயற்கை மணலை, மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அனைத்து கிரஷர் உரிமையாளர்களும் சொந்தமாக லாரிகளை வைத்துக் கொண்டு, கட்டுமான வேலைகளுக்கு மணல் கொண்டு செல்கின்றனர். இதனால், லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கிறோம்.

எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளையும் உடனடியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement