மதுரை நகரில் 'கூல் லிப்', புகையிலை பயன்பாடு இன்னும் குறையல! கைது, அபராதம், 'சீல்' என நடவடிக்கை தொடர்ந்தாலும்...

1

மதுரை; மதுரை நகரில் அபராதம், கைது, பெட்டி கடைகளுக்கு 'சீல்' வைப்பு என நடவடிக்கை தொடர்ந்தாலும் அரசால் தடை செய்யப்பட்ட 'கூல் லிப்' பயன்பாடு இன்னமும் குறையவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் உட்பட புகையிலைப் பொருட்களை உணவுப்பாதுகாப்பு துறையினருடன் போலீசார் இணைந்து மதுரையில் பறிமுதல் செய்து வருகின்றனர். 'கூல் லிப்' எனும் புகையிலையை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். 2023 நவம்பர் முதல் 2024 டிசம்பர் வரை 538 கிலோ 'கூல் லிப்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்கிறார் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன்.

அவர் கூறுகையில்'' கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றால் சீல் வைக்கிறோம் என்பதால் தற்போது வீடு, டூவீலர், ரோடுகளில் விற்பனை செய்கின்றனர். சமீபத்தில் அனுப்பானடி பொது கழிப்பறை அருகே புகையிலை பொருட்களை விற்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தோம். 'கூல் லிப்' மட்டுமின்றி தடை செய்யப்பட்ட எந்த புகையிலையை விற்றாலும் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்'' என்றார்.

மாவட்ட மனநல திட்ட அலுவலர் டாக்டர் சந்தோஷ் கூறியதாவது:


போதை அலைபேசி, இணையதளம், ஆன்லைன் விளையாட்டுகளில் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அவர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சி தருகிறோம். சமீபத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆசிரியர்களுடன் நடந்த கூட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் போதை தடுப்பு கிளப் (ஆண்டி டிரக்) உருவாக்க வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார். புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை உடனே தடுத்து நிறுத்த முடியாது.

அவர்களுக்கு யார் மூலம் புகையிலை பொருட்கள் கிடைக்கும் என்பதை கண்டறிந்து அதை தடை செய்ய வேண்டும். அதன்பிறகு மருத்துவ, உளவியல் ஆலோசனை வழங்கப்படும். அதிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க பெற்றோர், நண்பர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஆலோசனை வழங்குகிறோம். மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டிருந்தால் 93859 86455 ல் தெரிவிக்கலாம் என்றார்.
தடை செய்யப்பட்ட எந்த புகையிலையை விற்றாலும் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்''

Advertisement