விசாரணை அறிக்கை கோரி பொன்மாணிக்கவேல் வழக்கு: சி.பி.ஐ.,க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848248.jpg?width=1000&height=625)
மதுரை; சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக சி.பி.ஐ.,பதிந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை வழங்க முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார் (2018ல் ஓய்வு பெற்றார்). சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார்.
அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா மற்றும் கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜை 2017ல் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின் ஜாமினில் வெளியே வந்தனர்.
'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாஷா மனு செய்தார். சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரிக்க அந்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டில்லி சி.பி.ஐ.,போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர். அவருக்கு 2024 ஆக.30ல் உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமின் அனுமதித்தது. அவர் ஆரம்ப கட்ட விசாரணையின் அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி மதுரை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை அந்நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.
இதை எதிர்த்து பொன்மாணிக்கவேல், 'ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை அளித்தால்தான் எனக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன விபரம் தெரியவரும். கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து அறிக்கையை வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி சி.பி.ஐ.,-எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு பிப்.24க்கு ஒத்திவைத்தார்.
மேலும்
-
அரசு மருத்துவமனையில் நவீன பேஸ்மேக்கர் சிகிச்சை; ஏழை நோயாளிக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை
-
குஜராத்தில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த 2 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
உங்கள் எண்ணம் இங்கு ஈடேறாது : அமைச்சர் கொதிப்பு
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி