அன்னதானத்திற்கு அனுமதி பெற வேண்டும்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்
கடலுார்; வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் அன்னதானம் வழங்குவோர், உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார்.
வடலுார் சத்திய ஞானசபையில், 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கைலேஷ்குமார் தலைமையில் சுப்ரமணியன், சுந்தரமூர்த்தி, பாலாஜி, ராஜலட்சுமி உள்ளிட்ட குழுவினர் தர்மசாலையில் சமைக்கப்படும் உணவு மற்றும் காய்கறி, மளிகைபொருட்கள் சுகாதார முறையில் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அரிசி, பருப்புகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்கு, குடிநீர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
பின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அன்னதானம் வழங்குவோர் வள்ளலார் தெய்வ நிலையம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையே வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சுகாதாரம் மற்றும் தரம் தொடர்பான குறைகள் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர். ஆய்வின்போது கோவில் செயல்அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.