சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல; ஜெய்சங்கர் விளக்கம்

5


புதுடில்லி: ''சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல,'' என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.



அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானத்தில் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து கை விலங்குடன் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது: இந்தியர்களை மரியாதைக்குறைவாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தாங்கள் அனுபவித்த வேதனையை பகிர்ந்துள்ளனர். நாடு கடத்தப்படுவோர், தடுத்து வைக்கப்படும் நடைமுறை 2012ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
பெண்கள், குழந்தைகள் அவ்வாறு செய்யப்படவில்லை. அமெரிக்காவின் நடவடிக்கையில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை. 104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்தியர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு அனுப்பிய இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை பாயும்.

சட்ட விரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்கா விளக்கம்



இது தொடர்பாக, அமெரிக்கா அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 'சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படியே இந்தியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேசிய மக்கள் பாதுகாப்புக்கு சட்டத்தை உரிய முறையில் அமல்படுத்துவது முக்கியம். சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் படியே அனுப்பி வைக்கப்பட்டனர்' என அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement