ஷேக் ஹசீனா பேச்சுக்கு எதிர்ப்பு: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தன்னை கொல்ல முயன்றதாக, இந்தியாவில் தங்கி உள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சகம், அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை, விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு கூறியுள்ளது.
இச்சூழ்நிலையில், அந்நாட்டின் முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை கும்பல் ஒன்று இடித்து சேதப்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஷேக் ஹசீனா பேசியதாவது: வங்கதேசத்தில் அழிவுக்கான சகாப்தம் துவங்கி உள்ளது. தற்போது நாட்டில் குழப்ப நிலை நிலவி வருகிறது. உலகம் முழுவதும் வளர்ச்சி மாதிரிக்கான முன் மாதிரியாக இருந்த வங்கதேசம் தற்போது பயங்கரவாதிகள் மற்றும் போராட்டக்காரர்களின் புகலிடமாக மாறி உள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, அரசியலமைப்புக்கு எதிரானது. பணத்தை பயன்படுத்தியும், நமது நாட்டு மக்களின் சடலங்கள் மேல் நடந்தும் ஆட்சியை பிடித்து உள்ளது. என்னையும், எனது சகோதரியையும் கொலை செய்ய முகமது யூனுஸ் சதி செய்கிறார். இவ்வாறு ஷேக் ஹசீனா பேசியிருந்தார்.
இந்த பேச்சு, வங்கதேசத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது முடிந்த ஒரு சில மணி நேரங்களில் வங்கதேசத்திற்கான இந்திய தூதரக அதிகாரிக்கு, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.