ஹெக்ஸாவேர் பங்கு விலை ரூ.674 - 708 ஆக நிர்ணயம்

மும்பை:புதிய பங்கு வெளியீடுக்கு வரும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், அதன் பங்கு ஒன்றின் விலையை 674 - 708 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

மும்பையை தலைமை யிடமாகக் கொண்ட ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், நிதி, உடல் ஆரோக்கியம் மற்றும் காப்பீடு உட்பட ஆறு முக்கிய துறைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளித்து வருகிறது.

இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 8,750 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. இதற்காக, அமெரிக்க பன்னாட்டு சொத்து மேலாண்மை நிறுவனமான 'கார்லைல்' நிறுவனத்தின் அங்கமான, 'சி.ஏ., மேக்னம் ஹோல்டிங்ஸ்' வசமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

வரும் பிப்., 12 -- 14 வரை, பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். 50 சதவீத பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும்; 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும்; மீதமுள்ள 15 சதவீத பங்குகள் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில், 20 ஆண்டுகளுக்கு முன் டி.சி.எஸ்., 4,700 கோடி ரூபாய்க்கு புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதற்கு பின், அதிக மதிப்பிலான ஐ.பி.ஓ., வெளியிடும் ஐ.டி., நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் ஆகும்.

Advertisement