சமதளமற்ற ரயில்வே 'கேட்' அரையப்பாக்கத்தில் அவதி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848607.jpg?width=1000&height=625)
மதுராந்தகம் :மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், அரையப்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு- - விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் கேட் எண்.63 உள்ளது.
இங்கு, தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், தண்டவாளம் பகுதியில் வாகனங்கள் கடக்கும் இடங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு பணிகள் நடந்தன.
அதை சீரமைக்காததால், தற்போது அப்பகுதியில் இரும்பு கம்பிகள் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால், இருசக்கர வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
மேலும், சரக்கு ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள், ஜல்லி கற்கள் மற்றும் நீட்டிக் கொண்டிருக்கும் இரும்பு கம்பிகளால் டயர் பஞ்சராகி அவதிப்படுகின்றனர்.
எனவே, வாகனங்கள் கடக்கும் தண்டவாளப் பகுதியில் தார் கலவையால் சீரமைக்க, ரயில்வே துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.