சிப்காட் பூங்கா ஆலைகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம்
சென்னை:சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள, 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில் செயல்படும் ஆலைகளுக்கு, குழாய் வழியாக இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணி துவங்கியுள்ளது. செலவு குறையும் என்பதால், இதைப் பயன்படுத்த ஆலைகள் ஆர்வம் காட்டுகின்றன.
மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும்; சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கவும் இயற்கை எரிவாயு பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது.
சென்னை எண்ணுாரில், இந்தியன் ஆயில் நிறுவனம் எல்.என்.ஜி., எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையத்தை அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பலில் இயற்கை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இந்த எரிவாயு, வீடு மற்றும் ஆலைகளுக்கு பி.என்.ஜி., எனப்படும், 'பைப்டு நேச்சுரல் காஸ்' எனும் குழாய் வழித்தடத்திலும்; வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுதும் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிக்கு, ஏழு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
திருவள்ளூரில் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள, 'சுந்தரம் கிளேட்டன்' மற்றும் கும்மிடிப்பூண்டி, மணலி, அம்பத்துார், ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள 10 நிறுவனங்களின் ஆலைகள் ஆகியவற்றுக்கு 'டோரண்ட்' காஸ் நிறுவனம், இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்கிறது.
அத்துடன், மேலும் 20 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சி.என்.ஜி., குறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:மற்ற எரிபொருளுடன் ஒப்பிடும்போது, இயற்கை எரிவாயுவால் 25 சதவீதம் செலவு மிச்சமாகும். இந்த எரிவாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பதில்லை. தடையின்றி வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், தொழிற்சாலைகள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. அதற்கேற்ப, குழாய் வழித்தடம் அமைக்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு, ஆலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.இவ்வாறு கூறினர்.