முட்டுக்காடு மிதவை உணவகம் தனிநபருக்கு ரூ.1,400 கட்டணம்

மாமல்லபுரம்,முட்டுக்காடு படகு குழாமில், மிதவை உணவகத்திற்கு பயணியர் கட்டணமாக, தலா 1,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், சென்னை அடுத்த முட்டுக்காடு பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார பகுதியில், படகு குழாம் இயங்குகிறது.

காலால் இயக்கப்படும் படகுகள், மோட்டார் படகுகள், குழுவாக பயணிக்கும் படகுகள் உள்ளிட்டவற்றில், சுற்றுலா பயணியர் சவாரி செல்கின்றனர்.

பயணியரை கவரவும், சுற்றுலா வளர்ச்சிக்காகவும், தற்போது கால்வாயில் மிதவை உணவகம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின், ஐந்து கோடி ரூபாய் பங்களிப்பில், இதை இயக்குகிறது. இந்த மிதவை உணவகம், 125 அடி நீளம், 25 அடி அகலம் அளவில், குளிர்சாதன வசதியுடன் உள்ளது. இதில், 100 பேர் பயணிக்கலாம்.

இதில், குழுவாக வருவோரை மட்டுமே அனுமதித்து, தனிநபர் அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு, தற்போது தனிநபருக்கும் பயண அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சுற்றுலா வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:

தனியார் நிறுவனம் குறிப்பிட்ட தொலைவிற்கு இந்த மிதவை உணவக படகை இயக்கி, அதில் இசை நிகழ்ச்சியும் நடத்துகிறது. தனிநபர் அனுமதிக்கு, 1,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, குழுவாக வருவோருக்கும் 'பேக்கேஜ்' முறையும் உள்ளது. வருவாயை, சுற்றுலா வளர்ச்சி கழகம், தனியார் நிறுவனம் சதவிகித அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement