மினி லாரி கவிழ்ந்து விபத்து மீன்களை அள்ளி சென்ற மக்கள்

வேலுார்:வேலுார் அருகே, கடல் மீன் ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்ததில், சாலையில் கொட்டிய மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

விஜயவாடாவிலிருந்து, 2 டன் கடல் மீன்களை ஏற்றிய மினிலாரி, நேற்று காலை, 7:00 மணியளவில், கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தது. நாமக்கல்லை சேர்ந்த நடராஜன், 28, ஒட்டினார். சென்னை - பெங்களூரு சாலையில், வேலுார் மாவட்டம், பள்ளிக்கொண்டா அடுத்த அகரம்சேரி அருகே, லாரி டயர் வெடித்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி, சாலை நடுவே தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது. இதில், மினி லாரியில் இருந்த மீன்கள் சாலையில் கொட்டின.

இதை கண்ட அப்பகுதி மக்கள், டிரைவருக்கு என்ன ஆனது எனக்கூட பார்க்காமல், சாலையில் சிதறி கிடந்த மீன்களை சாக்கு பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனர். சிலர் தாங்கள் அணிந்திருந்த லுங்கியிலும், சேலையிலும் போட்டு எடுத்து சென்றனர்.

பள்ளிகொண்டா போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் டிரைவரை மீட்டு, போக்குவரத்தை சீரமைத்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement