கடனை செலுத்திய பிறகும் கெடுபிடி வருத்தம் தெரிவித்து வங்கி கடிதம்

நாமக்கல்:கல்வி கடன் விபரத்தை விற்ற வழக்கில், சம்பந்தபட்ட வங்கி, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி, வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் அருண் பிரசாத், 35. கடந்த, 2007ல் திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 2.57 லட்ச ரூபாய்- கல்வி கடன் பெற்று இருந்தார். நீதிமன்றத்தில் வங்கி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, 2017 ஏப்ரலில் வங்கிக்கு கடனை செலுத்தி விட்டனர்.

கடன் முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை, அருண் பிரசாத்துக்கு வங்கி வழங்கி உள்ளது.

இந்நிலையில், கடனை செலுத்திய பிறகும் தந்தையும், மகனும் ஏழு லட்சம் செலுத்த வேண்டும் என, கடன் மீட்பு நிறுவனம் கேட்டு வந்தது. அதிர்ச்சியடைந்த அருண்பிரசாத், வங்கியின் மீதும், அந்த நிறுவனம் மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2024ல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, கடந்த ஜன., 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், இழப்பீடாக, 5 லட்சம் ரூபாயை வங்கி வழங்கவும், மன்னிப்பு கடிதம் வழங்கவும் வங்கிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அருண்பிரசாத்திற்கு இழப்பீடு வழங்கிய வங்கி, 'ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்' என, வங்கி சார்பில் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி விட்டதாக, வங்கி சார்பில் நேற்று, நுகர்வோர் நீதிமன்றத்தில் தகவலை தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement