பட்டாபிராமபுரம் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள திரவுபதியம்மன் கோவில் தெருவில் கால்வாய் முறையாக அமைக்காததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது.

இந்த கழிவுநீர் வெளியே செல்வதற்கு வழிவகை செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால், கொசுக்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், புழுக்களும் உருவாகி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.

இதுதவிர, பல மாதங்களாக தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும், கிராம சபையில் மக்கள் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement