மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!

9


வயநாடு: கேரளாவில் மூன்று புலிகள் மரணத்திற்கான காரணத்தை வனத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஆண் புலி தாக்கியதில், 3 குட்டிகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கேரள மாநிலம் வயநாடு பஞ்சரக்கோடு பகுதியில் ராதா, 45, என்ற பெண், சில தினங்களுக்கு முன் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, வயநாடு வைதிரி பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் அழுகிய நிலையில், ஒரு புலியின் உடல் கிடைத்தது. அது, ராதாவை கொன்ற புலி என தெரிவிக்கப்பட்டது.



இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே மேலும் மூன்று புலிகள் இறந்து கிடந்தன. வயநாடு குறிச்சியாடு வனப்பகுதிக்குள் இரண்டு புலிகளின் உடல்களை, ரோந்து பணிக்கு சென்ற வனத்துறையினர் மீட்டனர். அருகே உள்ள காபி தோட்டத்தில் இன்னொரு புலியும் இறந்து கிடந்தது.


அடுத்தடுத்து மூன்று புலிகள் உயிரிழந்ததால், இதற்கான காரணத்தை கண்டறிய சிறப்புக் குழுவை அமைத்து, அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் உத்தரவிட்டார். இதற்காக, வடக்கு மண்டல தலைமை வனக்காவலர் கே.எஸ்.தீபா தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. புலிகள் மரணத்திற்கான காரணத்தை வனத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.



இது குறித்து, சிறப்புக்குழு அதிகாரிகள் கூறியதாவது: இளம் குட்டிகளைக் கொண்ட பெண் புலிகள் பொதுவாக இனச்சேர்க்கை காலத்தில், ஆண் புலிகளிடம் இருந்து விலகி இருக்கும். இதனால் ஆண் புலிகள் கோபத்தில் இருக்கும். அப்போது தனது கோபத்தை குட்டிகளிடம் ஆண் புலிகள் காட்டும். உயிரிழந்த மூன்று குட்டிகளுக்கும் இதே கதி ஏற்பட்டிருக்கலாம்.


குட்டிகளுக்கு கழுத்து மற்றும் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயங்கள் மற்றொரு புலியின் தாக்குதலால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. உயிரிழந்த ஆண் புலியின் மரணத்திற்கு காரணம், முதுகெலும்பு முறிவு மற்றும் முதுகுத் தண்டு துண்டிக்கப்பட்டது.


அதே நேரத்தில் பெண் புலியின் மரணத்திற்கு காரணம் மண்டை எலும்பு முறிவு மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் ஆகும். இரண்டுமே மற்றொரு புலியின் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின் போது புலி கடித்த அடையாளங்களும் காணப்பட்டன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் புலிகள் மரணத்திற்கான மர்மம் விலகியது.

Advertisement