கிடைத்தது நிம்மதி; ஆன்மிக அனுபவத்தை மனம் உருகி பகிர்ந்த ரஜினி!
சென்னை: தியானம் செய்வதன் மூலம் கிடைத்த மன அமைதி, நிம்மதி குறித்து நடிகர் ரஜினி வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். நான் இப்போது ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா (Y.s.s) ஆசிரமத்தில் இருக்கிறேன். இந்த ஆசிரமத்திற்கு மூன்றாவது முறையாக வந்துள்ளேன். முதலாவதாக 2002ம் ஆண்டு வந்தேன். இரண்டாவது முறையாக வந்த போது கூட இவ்வளவு அமைதியை நான் பார்க்கவில்லை.
அனுபவம்
தற்போது, இரண்டு நாட்கள் தங்கி இருந்து, நிறைய நேரம் ஆசிரமத்தை முழுவதுமாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் ரொம்ப சிறப்பு குருவின் அறையில் உட்கார்ந்து தியானம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. நேற்று காலை தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது. தியானம் செய்த ஒரு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. அந்த அதிர்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
இப்பொழுது என்னை பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களைப் பார்த்தாலே 'பாசிடிவ் வைப்' வருகிறது என்று சொல்கிறார்கள்.
21 வருடங்கள்
இதன் சீக்ரெட் வந்து, நான் தியானம் செய்து கொண்டு இருப்பது தான். நான் தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனை எவ்வாறு சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அது ஒரு விதமான அமைதி. 2002ம் ஆண்டு தியானம் செய்ய ஆரம்பித்தேன். இப்பொழுது 21 வருடங்கள் கழிந்து விட்டன. தினமும் செய்து கொண்டே இருந்தேன். முதலில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் ஒழுக்கமாக தினமும் தியானம் செய்து கொண்டே இருந்தேன். சில நேரங்களில் எனக்கு டவுட் வரும்.
நிம்மதி, அமைதி
என்னடா இவ்வளவு தியானம் செய்கிறோம் ஒரு மாற்றமும் நிகழவில்லையே என்று சந்தேகம் வந்தது. சரி இருந்தாலும் ஓகே என்று தியானம் செய்து கொண்டே இருந்தேன். இதன் பிறகு 10 முதல் 12 வருடங்களுக்குப் பிறகு எனக்கு மாற்றங்கள் தெரிந்தது. இதனுடைய தாக்கம் தெரியவந்தது. அது எனக்குள்ளே ஒரு மாதிரியான நிம்மதி, எப்போதுமே அமைதி ( peace). இதனால் கஷ்டப்படாமலே பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த குருக்கள் ஒருமுறை நமது கையைப் பிடித்து விட்டால், நாம் தாமாக விட்டு விட்டால் கூட அவர்கள் விடமாட்டார்கள். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.