ரத்தன் டாடா சொத்தில் மோகினிமோகன் தத்தாவுக்கு ரூ.500 கோடி பங்கு... யார் இவர் தெரியுமா?

1


மும்பை: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, தன்னுடைய சொத்துக்களை மூன்றில் ஒரு பங்கை மோகினி மோகன் தத்தா என்பவருக்கு எழுதி கொடுத்தது தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. யார் இந்த மோகினி மோகன் என்ற கேள்வியும் அனைவரிடத்தில் எழுந்துள்ளது.

டாடா நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான ரத்தன் டாடா, கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, பல கோடி ரூபாய் சொத்துக்களை தனது உயில் மூலம் பிரித்துக் கொடுத்தார்.
அறக்கட்டளை, தனது சகோதரர், உறவுமுறை சகோதரிகள், வீட்டுப் பணியாளர்கள், உதவியாளர் சாந்தனு நாயுடு ஆகியோருக்கு தனது வாரிசுதாரர்களாக அறிவித்து, சொத்துக்களை பிரித்து கொடுத்திருந்தார். தனது வளர்ப்பு நாய்களை கவனிக்கவும் தனியாக சொத்துக்களை ஒதுக்கியிருந்தார்.

அந்த வகையில், இதுவரை பெரிதும் யாரும் அறிந்திடாத ஒருவருக்கு சொத்துக்களை ரத்தன் டாடா எழுதி வைத்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரத்தன் டாடாவின் சொத்துக்களில் ரூ.500 கோடியை, தனது ஆண் நண்பரும், தொழிலதிபருமான மோகினிமோகன் தத்தாவுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.


யார் இவர்?

ஜாம்ஷெத்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான மோகினிமோகன் தத்தா,74, ஸ்டாலியன் எனும் நிறுவனத்தின் இணை உரிமையாளர். இவர், தனது நிறுவனத்தை டாடா குழுமத்துடன் இணைத்துக் கொண்டார். அதற்கு முன், தத்தா 80 சதவீதமும், டாடா நிறுவனம் 20 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
பல ஆண்டுகளாக ரத்தன் டாடாவுடன் இணைந்து பணியாற்றி வந்த இவர் நம்பிக்கைக்குரிய நபராக திகழ்ந்து வந்துள்ளார். இருவரும் 60 ஆண்டு கால நண்பர்கள். இவரது மகள் டாடா அறக்கட்டளையில் 10 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.


ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு, டிச., மாதம் மும்பையில் அவரது பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நெருங்கிய உறவினர்களும், முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மோகினிமோகன் தத்தாவும் பங்கேற்றார்.


அப்போது, பேசிய மோகன் தத்தா, '24 வயதில் தான் ரத்தன் டாடாவுடன் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய வளர்ச்சிக்கு அவர் மிகவும் உதவிகரமாக இருந்தார்,' எனக் கூறினார்.

ரத்தன் டாடா தன்னுடைய உயிலில் மோகன் தத்தாவின் பெயரை வாரிசாக சேர்த்திருந்தாலும், கோர்ட்டின் ஆய்வுக்குப் பிறகே, சொத்துக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement